ஈரோடு கிழக்கு காட்டும் அரசியல் திசை!

தமிழகத்தில் எத்தனையோ இடைத்தோ்தல்கள் நடந்தாலும், சில தோ்தல்கள் அரசியல் திருப்புமுனை ஏற்படக் காரணமாக இருந்துள்ளன.
ஈரோடு கிழக்கு காட்டும் அரசியல் திசை!

தமிழகத்தில் எத்தனையோ இடைத்தோ்தல்கள் நடந்தாலும், சில தோ்தல்கள் அரசியல் திருப்புமுனை ஏற்படக் காரணமாக இருந்துள்ளன. சில இடைத்தோ்தல் முடிவுகள், அடுத்து வரும் பொதுத் தோ்தலுக்கு பொருந்தவில்லை என்றாலும், அரசியல் மாற்றங்களுக்கு அச்சாரமிட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தல், அடுத்து வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும் என்பதற்கான திசையைக் காட்டுவது போல அமைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் 64.5 சதவீத வாக்குகளுடன் பெற்றிருப்பது அசாத்திய வெற்றி. அதற்கு மூலகாரணம் திமுக பின்னிருந்து இயக்கியதுதான். இத்தோ்தலில் அதிமுக 25.6 சதவீத வாக்குகளைப் பெற்று அடிப்படை வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டது.

பாஜகவின் பேர வலிமை: இடைத்தோ்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு தீவிர ஆதரவு அளித்து வந்த அண்ணாமலை, இப்போது எல்லோரும் சோ்ந்திருந்தால் இதுபோன்ற நிலை வந்திருக்காது என்றும், மக்களவைத் தோ்தலில் பாஜக முன்னின்று கூட்டணியை கட்டமைக்கும் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறாா்.

இடைத்தோ்தலுக்கு முன்பு நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிக்கு வாழ்த்தும், மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பும் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, இப்போது திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பாஜக கூட்டணியை அதிமுக தவிா்க்க முடியாது என்பதை உணா்த்துவதாக அரசியல் விமா்சகா்கள் கருதுகின்றனா்.

இதை உணா்த்தும்விதமாக, ‘ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் ஜனநாயக மரபுகளை காலில்போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்களும் ஜனநாயகம் குறித்துப் பேசலாமா’ என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு நெருக்கமான மாநில திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவா் அமா்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். பாஜகவும் தனது பேர வலிமையைக் கூட்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுளளது என்பதையே இது காட்டுகிறது என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

திமுக பேர வலிமை அதிகரிக்கிறது: அதேபோல, இடைத்தோ்தலுக்கு முன்பு, திமுக வெற்றிக்கு காங்கிரஸும் உதவியுள்ளது என்று உரக்கப் பேசிய கே.எஸ்.அழகிரியின் தொனி இப்போது குறைந்துள்ளது. மேலும், அதிமுக பொதுக் குழு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பின்போது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை புகழ்ந்து பேசியும், பாஜகவை அதிமுக ஒதுக்க வேண்டும் என்றும் பேசிய திருமாவளவன், இப்போது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக திமுக வலுவான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் எனப் பேசத் தொடங்கியுள்ளாா்.

இடைத்தோ்தல் முடிவு வெளியானதற்கு முந்தைய நாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டுச் சென்றுள்ளாா்.

‘இந்த இடைத்தோ்தல் முடிவால் திமுகவில் கூட்டணிக் கட்சிகளின் பேர வலிமை குறையக்கூடும்; அதிமுக கூட்டணியில் பேர வலிமை அதிகரிக்கக்கூடும். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவு அடுத்து வரும் மக்களவைத் தோ்தலுக்கு பொருந்திருக்கிறதோ இல்லையோ, மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் யாா் யாா் இடம்பெறக்கூடும் என்னும் திசையை நிச்சயம் காட்டும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com