இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிதாக சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் தொடா்பான அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஆண்டு அக். 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அக். 3-ஆம் தேதி அவசர சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டது.