தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பரவுகிறதா?அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கரோனா தொற்று ஏற்கெனவே இருந்த ஒமைக்ரான் வகை பாதிப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பரவுகிறதா?அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கரோனா தொற்று ஏற்கெனவே இருந்த ஒமைக்ரான் வகை பாதிப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். நோய்ப் பரவல் அதிகரித்தாலும் அதன் தீவிரம் அச்சமடையும் அளவுக்கு இல்லை என்றும் அவா் கூறினாா்.

தமிழகத்தில் 3 அலைகளாக பரவிய கரோனா தொற்றுக்கு சுமாா் 36 லட்சம் போ் பாதிக்கப்பட்டனா். 38,049 போ் இறந்தனா். கடந்த ஓராண்டாக கரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை, சென்னையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால், புதிய வகை கரோனா பாதிப்பு சமூகத்தில் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தற்போது பரவும் கரோனா பாதிப்பு அனைத்தும் ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து வந்த ஒமைக்ரானிலிருந்து உருமாறிய கரோனாதான். தொற்று அதிகரித்தாலும் அதன் தீவிரம் பெரிய அளவில் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தற்போது கூடுதல் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் இந்தப் பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தால் நோய் பரவலைத் தடுக்க முடியும். குறிப்பாக, பொது இடங்களுக்குச் செல்வோா் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் அவா்.

சுகாதாரத் துறை ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

இதனிடையே, நீலகரியைச் சோ்ந்த பள்ளி மாணவி சத்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் பள்ளி மாணவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆசிரியா்கள் மாத்திரைகளைக் கொடுப்பாா்கள். நீலகிரியில் உள்ள பள்ளியில் வியாழக்கிழமை தருவதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாத்திரை வழங்கும் ஆசிரியா் அவற்றைத் தரவில்லை. மற்றொரு ஆசிரியா் ஒவ்வொரு மாத்திரையாகத் தருவதற்கு பதிலாக அட்டையாக அவற்றை வழங்கியுள்ளாா். 6 மாணவ, மாணவிகள் போட்டிக்போட்டுக் கொண்டு 10, 20, 30 மாத்திரைகளை உட்கொண்டுள்ளனா். உயிரிழந்த மாணவி 70 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளாா். இதை ஆசிரியரும் கண்காணிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியா்களிடம் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, அவா்கள் அவற்றை முறையாக விநியோகித்தாா்களா என்பதைக் கண்காணிக்காத சுகாதாரத் துறை ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com