நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவச் சேவையைத் தொடக்கி வைத்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவச் சேவையைத் தொடக்கி வைத்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவச் சேவை தொடக்கி வைத்தும், பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, 

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்துகொள்வர்.

நான் பிரதமர் மோடியை சந்தித்த போது கூட நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துவந்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்தைப் பார்வையிட்டார்.

மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் கூறுகையில், 

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவச் சேவையைத் தொடக்கி வைப்பதன் மூலம் உயர் சிகிச்சைக்கு வெளி மாவட்டத்துக்கு செல்ல தேவையில்லை. இதனால் அரியலூர் பின்தங்கிய நிலையில் இருந்து வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் ம.பிரபாகரன், மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சந்திமலர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

முன்னதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வரவேற்றார். முடிவில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com