'அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை'

அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
'அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை'
Published on
Updated on
2 min read

அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ‘‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு‘‘ நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரை, பெண் காவலர் திட்டத்தை உருவாக்கியதன் பொன்விழா வருகிறது என்று சொன்னபோது, இதை மிகப்பெரிய விழாவாக நடத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். காரணம், பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன். ஆண் காவலர்கள் - பெண் காவலர்கள் என்று பிரித்துப் பார்ப்பதாக ஆண் காவலர்கள் தயவு செய்து நினைத்துவிடக் கூடாது. காவல் பணியோடு சேர்த்து குடும்பப் பணிகளையும் செய்தாகவேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திட வேண்டும். 
அதனால்தான் பெண்களைப் பொறுத்தவரைக்கும் வீட்டையும் நாட்டையும் சேர்த்துக் பாதுகாக்கிறார்கள் நம்முடைய பெண் காவலர்கள். அதனால்தான் அவர்களை மனந்திறந்து பாராட்ட வேண்டும் என்று நான் சொன்னேன். ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். அதனால்தான் எல்லா நிலையிலும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு முழு மரியாதை தர வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என காவல் பணியில் சேர்ந்தநிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நேரடி நியமன டி.எஸ்.பி. பதவியில் மட்டும் எந்த ஒரு பெண்ணும் பணியில் சேர இயலாத சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் 1989-ல் கழக ஆட்சி அமைந்தபோது, இத்தகைய குரூப்-1 தேர்வு உயர் பதவிகளை பெண்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே, அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி அன்றைக்கு அமல்படுத்தினார். 
இதன் விளைவாக, குரூப்-1 தேர்வில் பணியில் சேர்ந்த பெண் அதிகாரிகள் பலர், இன்றைக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும், காவல்துறைத் தலைவர்களாகவும், காவல் துணைத் தலைவர்களாகவும், காவல் கண்காணிப்பாளர்களாவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகவும், காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொன்விழா கொண்டாடும் நாளில் பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என்று மாற்றியமைக்கப்படும்.
2. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
3. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.
4. பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
5. பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய கருணாநிதி நினைவாக, அவரது பெயரில் “கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
8. பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்னைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, காவல்துறையில் பெண்கள் எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
9. பெண் காவல் ஆளினர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு(Career Counselling) ஒன்று அமைக்கப்படும். 
இந்த அறிவிப்புகள் உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். சட்டம்தான் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அந்த சட்டத்தை நிலைநாட்ட உங்களது திறமையும், வீரமும், கருணையும் பயன்படட்டும். தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது.
குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும் என்று கேட்டு, பொன்விழா கொண்டாடும் அனைத்து பெண் காவலர்களுக்கும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com