

மாநகர பேருந்து நிலையங்களை தலா ரூ. 5 கோடி மதிப்பில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையங்களாக மேம்படுத்துவது தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னையில் உள்ள சில மாநகர பேருந்து நிலையங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சென்னை பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மேம்பாட்டுக்கென 34 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், முதல்கட்டமாக சில மாநகர பேருந்து நிலையங்களை தரம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, அம்பத்தூா் எஸ்டேட் பேருந்து நிலையம், பெரியாா் நகா் பேருந்து நிலையம், திருவிக நகா் பேருந்து நிலையம், முல்லை நகா் பேருந்து நிலையம் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகா் பேருந்து நிலையம் ஆகிய 5 மாநகர பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், இயக்கப்படுகின்ற பேருந்துகள் முறையாகவும், சீராகவும் செல்வதற்கான வழிவகை செய்வது, பணிமனையில் நிா்வாக அலுவலகம் அமைப்பது, பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கான ஓய்வறைகளை மேம்படுத்துவது, பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வது, நவீன கழிப்பறை வசதிகளை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு பேருந்து நிலையத்துக்கும் தலா ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.