காவல் துறை ரோந்து வாகனங்களில் வைஃபை கேமரா!

காவல் துறை ரோந்து வாகனங்களில் வைஃபை (Wi-Fi) கேமரா வசதியை ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

காவல் துறை ரோந்து வாகனங்களில் வைஃபை (Wi-Fi) கேமரா வசதியை ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது. 

சாலை பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களைக் குறைக்கும் வகையில் முதல்கட்டமாக 320 ரோந்து வாகனங்களில் வைஃபை கேமராவை பொருத்த காவல் துறை முடிவு செய்துள்ளது. 

ஒவ்வொரு வாகனத்திலும் 3 கேமராக்கள் பொருத்தப்படும். ரோந்து வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மற்றும் வாகனத்திற்குள் தலா இரு கேமராக்கள், ஓட்டுநர் இருக்கை அருகே ஒரு கேமராவும் பொருத்தப்படவுள்ளன. 

முன்பக்கமும், பின்பக்கமும் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் வெளியில் நிகழும் குற்றச்செயல்களை காவலர்கள் கண்காணிக்க இயலும். காரினுள் கண்காணிக்க ஓட்டுநர் இருக்கை அருகே பொருத்தப்படும் கேமரா உதவும். 

கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகள் சென்னை மாநகர காவல் தலைமையகமான வேப்பேரியில் கண்காணிக்கப்படும். மேலும், விடியோ திரைகள் உள்ள மாவட்ட காவல் நிலையங்களிலும் திரையிடப்படும். உயரதிகாரிகள் செல்போன் மூலம் கண்காணிக்கும் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. 

செல்போன் மூலம் கண்காணிப்பதன் மூலம், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அல்லது விதிமுறைகளை மீறிய வாகனங்களை விரைவில் அடையாளம் காண இயலும். தற்போது சிசிடிவி காட்சிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளதால், அதன் காட்சிகளை பெறுவதற்கும் களத்திலுள்ள காவலர்களுக்கு கூடுதல் நேரம் செலவாகிறது. 

அதோடு மட்டுமல்லாமல் கடைகள் மற்றும் குடியிருப்புவாசிகள் மூலம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் சேமிப்புத்திறன் ஒருவாரத்திற்கு மட்டுமே உள்ளது. அதற்கு முந்தைய விடியோக்களின் பதிவுகளை அதனால் பெற இயலாத சூழல் ஏற்படும். 

அதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் வாகன தரவுத்தளத்துடன் (VAHAN) கேமராக்கள் இணைக்கப்படுவதால், வாகனங்களின் பதிவெண் மூலம் குற்றச்செயல்களில் அல்லது விதிமுறைகளை மீறிய வாகனங்களை அடையாளம் கண்டு அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க முடியும். 

காவல் துறை ரோந்து வாகனங்களில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு காவலர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com