சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி காஞ்சி வரதராஜ பெருமாள், நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற அத்திவரதர் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சித்ரா பௌர்ணமி தினத்தன்று காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பூமி மட்டத்தின் கீழ் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ள நடாவி கிணற்றில் எழுந்தருளி அப்பகுதி மக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அவ்வகையில் நேற்று மாலை திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட வரதராஜர் பல்வேறு கிராமங்கள் வழியாக இன்று மாலை ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு சிக்குதாடை கொண்டை மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் சூடிய அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நடாவி கிணற்றுக்கு வருகை புரிந்தார்.
நடாவி கிணற்றை மூன்று முறை வலம் வந்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் மீண்டும் கிணற்றிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தபோது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு எம்பெருமானை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து புஞ்சைஅரசன்தாங்கல் கிராம மக்கள் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வான வேடிக்கையுடன் வரவேற்று மரியாதை செலுத்தினர்.
இதன்பின் வேத பாராயணங்கள் பாட, நடைபயணமாக பாலாற்றில் எழுந்தருளி காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு சிறப்பு மலர் அலங்காரத்தில் மீண்டும் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார்.
திடீர் கனமழை காரணமாக அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நடாவி கிணற்றினை தரிசித்து விட்டு வீடு திரும்பினர்.