

பெங்களூரு: வெறுப்பை விதைப்பவர்களால் கர்நாடகாவுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாகவே, கா்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பலா் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்கள். மே 8 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சனிக்கிழமை (மே 6) கா்நாடகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ஹுப்பள்ளியில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவே ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டார். வெறுப்பை விதைப்பவர்களால் கர்நாடகாவுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை ஏற்படுத்த முடியாது.
ராகுலின் நடைப் பயணத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதைக் கண்டு பாஜகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதம் குறித்து காங்கிரஸ் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பாஜகவினர் பதில் அளிக்கமாட்டார்கள். ஜனநாயக மதிப்பீடுகள் தங்களின் சட்டைப்பையில் இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள்.
பாஜக அரசின் ஊழல், வெறுப்பு கலாசாரம், மோசடி ஆகியவற்றில் இருந்து விடுபட்டால் மட்டுமே கர்நாடகா முன்னேற முடியும்.
இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பிரதமர் மோடியின் ஆசி கர்நாடகாவுக்கு கிடைக்காது என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு கர்நாடக மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள். இந்த மிரட்டலுக்கு அஞ்சும் அளவுக்கு மக்கள் அவ்வளவு கோழைகள் அல்ல என்பதை பாஜகவினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து, நல்லாட்சி வழங்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் சோனியா காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.