
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமலாகும் என்றும் அதில் தமிழ் மொழிப்பாடமும் விருப்ப்பாடமாக இடம்பெறும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் 129 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 359 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதினார்கள். இதற்கான முடிவை தமிழக அரசு இன்று வெளியிட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநில பிளஸ் டூ தேர்வு முடிவுகளை முதல்வர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
அதன்படி இந்தாண்டு பிளஸ்டூ தேர்வில் 92.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.46 சதவீதம் குறைவு. அரசு பள்ளிகளை பொருத்தவரை 85.38% சதவீதம் ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதிகப்படியாக வணிகவியல் பாடத்தில் 157 மாணவர்கள் 100 க்கு 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தமிழ் மொழியில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவதற்காக கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்றும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் விருப்ப மொழியாக தமிழ் மொழிப்பாடம் இடம் பெறும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டு துவக்கத்திலே மாணவர்களுக்கான பாடப்புத்தகம், இலவச நோட்டு புத்தகங்கள்,சீருடைகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...