
நாமக்கல்: நாமக்கல் அருகே அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி காளைகளுடன் இளைஞர்கள் திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் - துறையூர் சாலையில், அலங்காநத்தம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா தொற்று மற்றும் அரசியல் காரணங்களால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஜல்லிக்கட்டு காளைகளுடன் போராடும் இளைஞர்கள்.
இந்நிலையில், ரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், அலங்காநத்தம், பொட்டிரெட்டி்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்து அலங்காநத்தம் பிரிவு சாலையில் திங்கள்கிழமை காலை 10:30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு குழு நிர்வாகிகளிடம் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என இளைஞர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்
நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு குழு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...