
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை(மே 10) தென்கிழக்கு மற்றம் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும்.
இது மே 11ல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
மே 9(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
படிக்க: காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 12 பேர் பலி
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு..
மே 9-ல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.