நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழில்: வேலையிழந்த கிராமப்புற கூலித்தொழிலாளர்கள்!

நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழிலால் கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
வாழப்பாடி அடுத்த கீற்று முடையும் பெண் தொழிலாளர்கள்.
வாழப்பாடி அடுத்த கீற்று முடையும் பெண் தொழிலாளர்கள்.

வாழப்பாடி: நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழிலால் கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

கொட்டகை, வீட்டு கூரை வேய்வதற்கும். பந்தல் அமைப்பதற்கும் பல்வேறு விதமான  நவீன முறை தகடுகள், நெகிழி மற்றும் சிமெண்ட் அட்டைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால், தென்னங்கீற்றுகள் பயன்பாடு அடியோடு குறைந்து போனது. இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கிராமப்புற மக்களின்  பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான  கீற்று முடையும் கைத்தொழில் நலிந்து வருகிறது.  

சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வசிஷ்டநதி, வெள்ளாற்று படுகை கிராமங்கள், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை பாசன கிராமங்கள் உள்பட 200க்கும் அதிகமான கிராமங்களில்,10,000 ஏக்கர் பரப்பளவில் நீண்டகால பலன்தரும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர். வாழப்பாடி பகுதியில் இத்தொழில் பல நுாறாண்டாக தொடர்ந்து வருவதால் பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் தென்னை மட்டைகளை எண்ணிக்கை அடிப்படையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்  கீற்று வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களை கொண்டு கீற்று முடைந்து கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். 

சிதம்பரம், விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி  உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், பேளூர் பகுதியில் இருந்து தென்னங்கீற்றுகள் விற்பனைக்கு செல்கிறது. 

கடலோர கிராமங்களில் குடிசை வீடுகள் அமைக்கவும்,  கால்நடை வளர்ப்பு கொட்டகைகளின்  மேற்கூரை வேய்வதற்கும், மாநாடு, விழாக்கால பந்தல்கள், கூடாரங்கள், சினிமா செட்டிங் அமைப்பதற்கும் தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

ஏத்தாப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தென்னங்கீற்றுகள். 
ஏத்தாப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தென்னங்கீற்றுகள். 

வாழப்பாடி பகுதியில் ஏராளமான கிராமங்களில், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததால், தென்னங்கீற்று முடையும் தொழிலை நம்பி, பாரம் ஏற்றுவோர், கீற்று முடைவோர், வாகனம் ஓட்டுவோர் உள்பட 10,000 கூலித்தொழிலாளர்கள்  பிழைப்பு நடத்தி வந்தனர். நாளொன்றுக்கு 200 கீற்று முடையும் பெண் தொழிலாளர்களுக்கு  ரூ. 400, பாரமேற்றும் ஏற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.600 வரையும், தினக்கூலியாக கிடைத்து வந்தது.

புயல் மற்றும் மழையில் அடிக்கடி சேதமடைந்து போவதாலும், எளிதில் தீப்பற்றிக்கொள்வதாலும், தென்னங்கீற்று கூரை வேய்வதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததாலும்,  உள்ளூரில் தென்னங்கீற்று பயன்பாடு குறைந்து போனது. 

கடலோர மாவட்டங்களில் கொட்டகை, வீட்டுக் கூரை வேய்வதற்கும், பல்வேறு மாநாடு, பொதுக்கூட்டம், சினிமா செட்டிங்  பந்தல் அமைப்பதற்கும் பல்வேறு விதமான  நவீன முறை தகடுகள், நெகிழி மற்றும் சிமெண்ட் அட்டைகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தென்னங்கீற்றுக்கு கேட்பாரற்று வருகிறது.

இதனால், தற்போது முடைந்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தென்னங்கீற்றுகளை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர்.  

இதனால்,  சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமப்புற மக்களின்  பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான  கீற்று முடையும் கைத்தொழில் நலிந்து வருகிறது. எனவே இத்தொழிலை கைவிட்டு வரும் தொழிலாளர்கள், பாக்கு உரித்தல், ஆடு, கறவைமாடு வளர்த்தல், கட்டடத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். 

இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சேர்ந்த தென்னங்கீற்று வியாபாரி கலைச்செல்வி கூறியதாவது:

‘தென்னங்கீற்று முடையும் கைத்தொழிலை கற்றுக்கொள்ள இளையத் தலைமுறை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், குறைந்த விலைக்கு நீடித்து உழைக்கும் நெகிழி, சிமெண்ட் மற்றும் கலாய் இரும்பு தகடுகள் விற்பனைக்கு வந்து விட்டதால் தென்னங்கீற்று பயன்பாடு அறவே குறைந்து விட்டது. எனவே, ஆர்டர் கிடைக்காததால், ஆயிரக்கணக்கான  தென்னங்கீற்றுகள் கேட்பாரற்று தேங்கி கிடக்கிறது. எனவே, வியாபாரிகளும், தொழிலாளர்களும் இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com