

ஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி விண்ணமங்கலம் 230/110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து ஆம்பூர் நகர பகுதி மற்றும் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்து வருவதைக் கண்டு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சடைந்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் ஆம்பூர் , மின்னூர், விண்ணமங்கலம், அய்யனூர், கென்னடிகுப்பம், புதூர், பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், ஆலாங்குப்பம், சோலூர், காட்டுகொல்லை, கம்மியம்பட்டு புதூர், தேவலாபுரம், கரும்பூர், குமாரமங்கலம், வீராங்குப்பம், மேல் சான்றோர்குப்பம், தென்னம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.