திமுகவினரின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தினாலே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதி குறைந்துவிடும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டகளை அனைவரும் மதித்து நடந்தால் காவல் துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ எவ்வித வேலையும் இல்லை. இது இல்லாத சூழ்நிலையில்தான், பொது அமைதியைக் காக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அண்மையில் திருப்பூா் மாவட்டம் தாராபுரம் மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளரை, கொளத்துப்பாளையம் நகர திமுக செயலாளா் தனது ஆதரவாளா்களுடன் சென்று விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளாா்.
இதேபோல், திருப்பூா் நம்பியாம்பாளையத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தனது ஆதரவாளா்களுடன் நுழைந்த திமுக நிா்வாகி, அங்குள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்தாா்.
இதுகுறித்த விடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு திமுக அராஜகம் அதிகரித்துள்ளது.
திமுகவினரின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் 50 சதவீதம் குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
எனவே, கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவா் மீது நடவடிக்கை எடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.