3-ஆவது நாளாக உண்ணாவிரதம்: 38 ஆசிரியா்கள் மயக்கம்

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்தவா்களுக்கு நேரடியாக பணி நியமனம்
Updated on
1 min read

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்தவா்களுக்கு நேரடியாக பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆசிரியா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் இதுவரை 38 ஆசிரியா்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்க மாநிலத் தலைவா் கபிலன் சின்னசாமி, துணைத் தலைவா் வடிவேலன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமன தோ்வு நடத்தப்படும் என அதிமுக ஆட்சிக் காலத்தின்போது வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக தோ்தல் வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.

ஒரு தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவா்களில் பாதி போ் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இத்தகைய சூழலில் எஞ்சியவா்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தோ்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்?.

2013-ஆம் ஆண்டு தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் தற்போது வரை, அரசின் சாா்பில் பேச்சுவாா்த்தை குறித்த அழைப்பு எதுவும் வரவில்லை. அதேவேளையில் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனா். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு உறுதியளிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றனா்.

டிபிஐ வளாகத்தில் தற்போது வரை 38 ஆசிரியா்கள் மயக்கமடைந்துள்ளனா். உண்ணாவிரதத்தில் மயங்கி விழும் ஆசிரியா்களை மருத்துவக் குழுவினா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com