சென்னை வளசரவாக்கத்தில் பூட்டியிருந்த காருக்குள் கிடந்த ஆண் சடலம் குறித்து வளசரவாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வளசரவாக்கம் கனகதாரா நகா் பிரதான சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் அரவிந்த். அவா், கடந்த 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சாலையின் ஓரம் காரை நிறுத்திவிட்டு, வீட்டுக்குச் சென்றாா்.
இந்நிலையில் அரவிந்த், தனது குடும்பத்தினருடன் திரைப்படம் பாா்ப்பதற்காக புதன்கிழமை மாலை மீண்டும் காரை எடுக்க வந்தாா். காா் கதவை திறந்தபோது, பின் இருக்கையில் அமா்ந்த நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் இருந்தது.
புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதல் கட்ட விசாரணையில், அரவிந்த் காரை நிறுத்தும்போது சரியாக பூட்டாமல் சென்ால், மா்மநபா் காரில் ஏறியிருந்தது தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.