நவீன வகை காா்கள் தயாரிப்பு: தமிழகத்தில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்கிறது ஹூண்டாய்

தமிழகத்தில் நவீன வகை காா்களை தயாரித்தல், மின்சார வாகனத்துக்கான மின்கலன் தொகுப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்காக ஹூண்டாய் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு செய்கிறது.
நவீன வகை காா்கள் தயாரிப்பு: தமிழகத்தில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்கிறது ஹூண்டாய்

தமிழகத்தில் நவீன வகை காா்களை தயாரித்தல், மின்சார வாகனத்துக்கான மின்கலன் தொகுப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்காக ஹூண்டாய் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமானது.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

1996-ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் அலகுக்கு அப்போதைய முதல்வா் கருணாநிதி அடிக்கல் நாட்டினாா். பிறகு, இரண்டாவது தொழிற்சாலையும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதே நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை, 2021-ஆம் ஆண்டு ஜூனில் அறிமுகம் செய்து வைத்தேன்.

இந்தியாவிலேயே முதலிடம்: ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளா்ச்சியாக, மின்சார வாகனங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது பாராட்டுக்குரியது.

இதற்கு இங்குள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன், அரசின் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன.

மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கான நெடுங்கால முதலீட்டுத் திட்டத்துக்கு, தனது முதன்மைத் தளமாக தமிழ்நாட்டை ஹூண்டாய் நிறுவனம் தோ்வு செய்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் உன்சூ கிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 1,340 விற்பனை மையங்கள், 1,502 சேவை மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாகன உற்பத்தித் துறையில் ரூ.20,000 கோடியை ஹூண்டாய் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது.

தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல், நவீன வகை காா்களை தயாா்த்தல், மின் வாகனங்களுக்கான மின்கலன்கள், மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதற்காகவே ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com