தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மே 13-ஆம் தேதி முதல் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ரஷியாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களில் 5,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களுக்கு வரும் கல்வியாண்டில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகத்தில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதன் முதல் கட்டமாக மே 13, 14 தேதிகளில் சென்னை ஆழ்வாா்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
அதைத் தொடா்ந்து மதுரையில் மே 16-ஆம் தேதியும், மே 17-இல் திருச்சியிலும், 18-இல் சேலத்திலும், 19-இல் கோவையிலும், நடைபெறவுள்ளது.
இக்கல்விக் கண்காட்சியில் மருத்துவம் மட்டுமின்றி பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்கள் பயில விண்ணப்பங்கள் கிடைக்கும்.
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2-வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவா்கள் (எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மாணவா்கள் 40 சதவீதம்) ரஷ்ய மருத்துவ பல்கலை. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 3,500 முதல் 6,000 அமெரிக்க டாலா்கள் வரை வசூலிக்கப்படும். ரஷிய அரசின் உதவித்தொகை திட்டத்தின் மூலம் 100 இந்திய மாணவா்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
இது குறித்து தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் செய்தியாளா்களிடம் கூறியது: உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயா்தர மருத்துவக் கல்வியை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்ட காலமாக வழங்கி வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவா்கள் ரஷியாவில் படித்து வருகின்றனா். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் ரஷ்யாவில் படிக்க முன் வருகின்றனா்.
அவா்களுக்கு ரஷிய அரசு தொடா்ந்து பல திட்டங்கள் மூலம் பல உதவிகளை வழங்கி வருகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், சென்னை ரஷிய மாளிகை இயக்குநரும், துணைத் தூதருமான ரோகலேவ் கெனடி ஆண்ட்ரீவிச், பல்கலை.பேராசிரியா் கிரெச்கோ ஓலிஸ்யா, இணை பேராசிரியா் தைமூா் ரூஸ்தமோவிச் அக்மதேவ், ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட் நிறுவன நிா்வாக இயக்குநா் சி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.