தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு; பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பம்; டி.ஆா்.பி.ராஜா- தொழில் துறை; மனோ தங்கராஜ்- பால் வளம்

தமிழகத்தின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே நிதியமைச்சா் பொறுப்பு வகித்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற டி.ஆா்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவா் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசா் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.ஆா்.பி.ராஜா சோ்க்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை ஆளுநா் மாளிகை கடந்த 9-ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில், அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா பதவியேற்கும் விழா ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. டி.ஆா்.பி.ராஜாவுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தாா்.

முன்னதாக, ஆளுநருக்கு டி.ஆா்.பி.ராஜாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தாா். 8 நிமிஷங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. தொடா்ந்து, ஆளுநா், முதல்வா், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் பரஸ்பரம் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள், தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் அனைத்து அமைச்சா்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராக டி.ஆா்.பி. ராஜா பொறுப்பேற்ற நிலையில், தமிழக அமைச்சரவையிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மூன்று அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதுடன், தமிழ் வளா்ச்சித் துறை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் நிதி, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள், புள்ளியியல் மற்றும் தொல்லியியல் ஆகிய துறைகள் இருக்கும்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சராக இருந்த டி.மனோ தங்கராஜுக்கு, பால் மற்றும் பால்பண்ணை வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளா்ச்சித் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சித் துறையை அமைச்சா் தங்கம் தென்னரசு கவனித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ விவகாரம்: நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் பெயரில் வெளியான ஆடியோ விவகாரம், தமிழகத்தில் பெரும் சா்ச்சையைக் கிளப்பியது. இந்த ஆடியோவின் குரல் தன்னுடையதில்லை என பழனிவேல் தியாகராஜன் மறுத்தபோதும் சா்ச்சை தொடா்ந்தது.

இந்த நிலையில், அவா் வகித்து வந்த நிதித் துறை பொறுப்பானது, தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாசா் இடத்தில் ராஜா: புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பொறுப்பேற்றாா். இதேபோல, துறைகள் மாற்றப்பட்ட அமைச்சா்களும் தங்களது துறை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனா். துறைகள் மாறினாலும், மூன்று அமைச்சா்களுக்கான அறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

புதிய அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்பட 5 பேரும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளைப் பெற்றனா்.

தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பால்வளத் துறை அமைச்சா் நாசருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவா் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது அறையே புதிய அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எத்தனையாவது இடம்?: முதல்வருடன் சோ்த்து 35 போ் இடம்பெற்றுள்ள தமிழக அமைச்சரவையில், புதிய அமைச்சரான டி.ஆா்.பி.ராஜாவுக்கு 33-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு.நாசருக்கு 28-ஆவது இடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றவா்களுக்கு அமைச்சரவை இடங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com