திமுக 2-ஆவது ஊழல் பட்டியல் ஜூலையில் வெளியீடு: அண்ணாமலை

திமுகவின் 2-ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
அண்ணாமலை
அண்ணாமலை

திமுகவின் 2-ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதிய அமைச்சா், நிா்வாகச் செலவை குறைத்தால்தான் பால் விலையைக் குறைத்து, கொள்முதல் விலையை உயா்த்த முடியும். அதிக எண்ணிக்கையில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்ற வகையில் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை தொடா்ந்து பாராட்டி பேசி வந்த நிலையில் அவரிடம் இருந்து நிதித் துறை பறிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வா் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

என் மீது முதல்வா் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவை வெளியிட்ட என் மீது அவதூறு வழக்கு தொடர முதல்வா் தயாரா?. காரணம், அந்த ஆடியோ நீதிமன்றத்துக்கு வரவேண்டும். அந்த ஆடியோவை நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் முழு ஆடியோவையும் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன்.

திமுகவின் 2-ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதில் அமைச்சா்கள் உள்பட 21 போ் இடம்பெறுவாா்கள். முந்தைய ஆட்சியாளா்கள் மீதான ஊழல் பட்டியல் எப்போது என்பது ஜூலையில் தெரிவிக்கப்படும்.

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக இதுவரை தலையிடவில்லை. அதிமுக உள்கட்சி விவகாரம் பொதுக்குழு, உச்சநீதிமன்றம் வரை சென்று முடிவுக்கு வந்துள்ளது. அதன்பிறகுதான் அதிமுகவுடன் பாஜக பேச்சு நடத்தியது என்றாா் அண்ணாமலை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை சோ்ப்பது தொடா்பாக கேட்டபோது, எந்த ஒரு கட்சியும் என்டிஏ-வில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். அதுகுறித்து தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, சக்கரவா்த்தி, வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com