
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
சென்னை: கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில், கட்சித் தலைவர்களின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று சனிக்கிழமை(மே 20) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும், 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள இருவருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா! என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...