தமிழ்நாட்டிற்கென தனித்துவம்மிக்க புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு!

தமிழ்நாட்டிற்கான தனித்துவம்மிக்க புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுக்குழுவில் பேசுகிறார் செயலர் சுப்பிரமணியன்
பொதுக்குழுவில் பேசுகிறார் செயலர் சுப்பிரமணியன்

பேராசிரியர் ஜவகர்நேசனை மீண்டும் கல்விக்குழுவில் இணைத்து, தமிழ்நாட்டிற்கான தனித்துவம்மிக்க புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முனைவர் எஸ். தினகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சிவ ஸ்ரீ ரமேஷ் வரவேற்றார்.  மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்தப் பொதுக்குழுவில் தமிழக கல்விக் கொள்கை தொடர்பாக விவாதித்து விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்திற்கான தனியொரு கல்விக் கொள்கையை வகுக்க மாநில அளவில் குழு குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்வியாளர்  பேராசிரியர் ஜவகர்நேசன் கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் என்று குறிப்பிட்ட பொதுக்குழு, அவர் குழுவில் மீண்டும் இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

“இந்திய அரசு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்க,  கருத்து கேட்கத்  தொடங்கிய 2016 ஆம் ஆண்டு முதலே, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பங்களித்துக் கருத்துகளைத் தெரிவித்துவருகிறது.

புதிய கல்விக் கொள்கையின் வகுப்புவாதம், வணிகவாதம், மத்தியத்துவமாக்கல் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஏராளமான கட்டுரைகள், வெளியீடுகள் மூலம் எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் வந்துள்ளது.

இதன் ஒருபகுதியாக பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள ஆசிரிய  அமைப்புகள், மாணவ அமைப்புகள், கல்வியில் அக்கறை உள்ள அமைப்புகள் உள்ளிட்ட 42 இயக்கங்களை இணைத்து "கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கி மாற்றுக் கல்விக்கான மக்கள் சாசனத்தை வெளியிட்டோம்.

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் அறிக்கை என்னவாயிற்று என்று கூறாமலேயே கஸ்தூரிரங்கன் குழு அமைக்கப்பட்டது. அதற்கு எதிரான வலுவான போராட்டங்களில்  தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சி உள்பட பல கட்சிகள் ஈடுபட்டன. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பெரும் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

கடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு முக்கிய பேசுபொருளாகவும் மாறியது.

இந்தப் பின்னணியில் தற்போதைய அரசு, "புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும்" என்று உத்தரவாதம் அளித்தது.

இதன் அடிப்படையில் நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாட்டிற்கான புதிய  கல்விக் குழு உருவாக்கப்பட்டது. இதில் நீதிபதி முருகேசன் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கல்வியில் ஒவ்வொரு வகையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். இதனைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பலரும் மனம் நிறைந்து வரவேற்றனர்.

மாநிலத்திற்கான புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க உருவாக்கப்பட்ட குழு காலதாமதமாகத் தனது பணிகளைத் துவங்கினாலும், உலகம் முழுதும் 113 கல்வியாளர்களைக் கொண்ட 13 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

துணை குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று இடைக்கால அறிக்கையை பேரா. ஜவகர்நேசன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அரசுக்கு சமர்ப்பித்தார். இந்த நிலையில்தான் சில முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து உயர்நிலைக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகியுள்ளார்.

குழுவின் தலைவர் ரகசிமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்பட்டார், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அச்சுறுத்தல், உயர்நிலைக் குழு இயங்க முடியாத வகையில் அதிகாரிகளின் எல்லைமீறல்கள், அதிக அளவு தலையீடுகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடியொற்றி மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழுவின் செயல்பாடுகள் செல்கின்றன என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பேராசிரியர் ஜவகர் நேசனின் கல்விப் புல ஆழம், தொலைநோக்குப் பார்வை, தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றான கல்விக் கொள்கையை உருவாக்குவதில்  அவருக்குள்ள பார்வை ஆகியவை அவரது "கல்வியைத் தேடி" நூலின் வழியே  வெளிப்பட்டது.

"தேசிய கல்விக் கொள்கை 2020" அடியொற்றித் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையும் அமையவிருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பது ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது. பேராசிரியர் ஜவகர் நேசனின் இந்த வருத்தம் முழுமையாக்க் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றான தமிழ்நாட்டிற்கான தனித்துவம் மிக்க கொள்கையை உருவாக்குவதில் ஆர்வமுள்ள பேராசிரியர் ஜவகர் நேசனை அழைத்துப் பேசி உயர்நிலைக் குழுவில் இணைத்து மீண்டும் தமிழ்நாட்டிற்கான தனித்துவம் மிக்க புதிய கல்விக் கொள்கையை உருவாக்கித் தர வேண்டும்” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக் குழு  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தமிழக கல்வி நிலைமை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் தாமஸ் பிராங்கோ, பேராசிரியர்கள் என். மணி,  நாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினார். அறிவியல் இயக்கத்தில் நீண்ட நாள்களாகப் பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் மாநில செயற்குழு உறுப்பினர் சசிகுமார் நன்றி கூறினார்.

பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், மாநில செயலாளர்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com