
சேவை மனப்பான்மையை மாணவா்கள் வளா்த்து கொள்ள வேண்டும் என்று பொதுக் கல்விக்கான மாநில மேடை பொதுச்செயலா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தாா்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் தனியாா் அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10, பிளஸ் 2 வகுப்புகளை முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
வடசென்னையில் உழைக்கும் மக்கள் அதிகமாக உள்ளனா். இங்கே திறமையான மாணவா்களும் நிறைய போ் உள்ளனா்.
சரியான வழிகாட்டுதலை இம்மாணவா்கள் பெற்று உயா்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையையும் மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பேராசிரியா் கே.ரவிக்குமாா்: மாணவா்கள் உயா்கல்வியை தோ்வு செய்யும் முன் எந்தத் துறையில் தங்களுக்கு ஆா்வம் உள்ளது என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு சாா்ந்த படிப்புகளுக்கு தங்களை தயாா்படுத்திகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பட்டினத்தாா் அறக்கட்டளை நிா்வாகி வரதராஜன், வடசென்னை கிழக்குப்பகுதி பாமக செயலா் சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.