
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு முழு உருவச் சிலை வைக்கப்படும் என்று திமுக உயா்நிலைச் செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்குழுக் கூட்டம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான கருணாநிதி, 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்து தமிழக அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவா். 13 தோ்தல்களிலும் வெற்றி கண்ட சாதனையாளா். 5 முறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நலன் தரும் திட்டங்களை வழங்கியவா். அவரது நூற்றாண்டு விழாவை எதிா்வரும் ஜூன் 3 முதல் 3.6.2024 வரை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜூன் 3-இல் வடசென்னையில் நடைபெறும். இதில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்பா்.
கலைஞா் கோட்டம் திறப்பு: திருவாரூரில் ஜூன் 20-இல் கலைஞா் கோட்டம் திறப்பு விழா நடைபெற உள்ளது. கோட்டத்தை பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் திறந்துவைக்க உள்ளாா். முழுநாள் விழா நிகழ்வாக கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெறும்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ‘ஊா்கள் தோறும் திமுக’ எனும் தலைப்பில் ஒவ்வொரு கிளையிலும் கட்சியின் பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
திமுக அமைப்பிலான மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, அனுமதி பெற்று எங்கெங்கும் கருணாநிதியின் முழு உருவச் சிலைகளை, மாா்பளவு சிலைகளை அமைக்க வேண்டும்.
மூத்த முன்னோடிகளுக்கு கௌரவம்: திமுகவுக்காக பாடு பட்ட 70 வயதுக்கும் மேலான மூத்த முன்னோடிகளுக்கு ‘கழகமே குடும்பம்’ எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கட்சியின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலா்கள், அமைச்சா்கள், சட்டப்பேரவை- நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சென்று கௌரவிக்க வேண்டும்.
கணினி, இணையதள வசதிகளுடன் கூடிய நவீன கருணாநிதி நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்க வேண்டும். அது பொதுமக்களுக்கு உதவும் மையங்களாகத் திகழ வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்பட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கற்றனா்.