நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச.உமா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரேயா பி.சிங், வேளாண் துறை கூடுதல் இயக்குநராக பணியிடமாறுதல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ச.உமா நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மாவட்ட ஆட்சியர் உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இருந்து முதல் ஐஏஎஸ் ஆட்சியராக பதவி அமர்த்தப்பட்டுள்ளேன்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நான் கடந்த 1995 இல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து, 2005 இல் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பதவி வகித்தேன்.
2015-இல் தேசிய நலவாரிய குழும இணை இயக்குநராக பொறுப்பு வகித்தேன். 2019-இல் ஐஏஎஸ் பதவி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு திருவள்ளூரில் பயிற்சி ஆட்சியராகவும், பழனியில் சார் - ஆட்சியராகவும், ராணிப்பேட்டையில் துணை ஆட்சியராகவும் பணியாற்றினேன்.
அதன் பிறகு சுகாதாரத் துறை திட்ட இயக்குநராகவும், முதல்வர் காப்பீடு திட்டம், ஆம்புலன்ஸ் சேவை, உலக வங்கி, ஜப்பான் வங்கியில் நிதி உதவி பெறுவதற்கான திட்ட இயக்குநராகவும் பணியாற்றினேன். தற்போது நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன்.
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தேவையான சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமும், சுகாதாரத்துறை மூலமாகவும் அவர்களுடைய மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உமா கூறினார்.