கோடை விழா: சுற்றுலாப் பயணிகளால் திணறும் ஏற்காடு!

ஏற்காட்டில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 
கோடை விழா: சுற்றுலாப் பயணிகளால் திணறும் ஏற்காடு!

ஏற்காட்டில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாகக் கருதப்படும் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டு ஏற்காட்டில் 46-வது கோடை விழா நேற்று தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வண்ணமயமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற துவக்க விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உருவங்களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர் மேலும், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை உட்பட 42 துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பல்துறை விளக்க சாதனை கண்காட்சி . தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முற்றிலும் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட கண்காட்சியையும் அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டதோடு சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்து 50 வகையான சிறுதானிய உணவு முறை செயல் விளக்க கண்காட்சியும் திறந்து வைத்தனர்.

கோடை விழாவில் முக்கியமாகக் கருதப்படும் அண்ணா பூங்காவில் கார்நேஷன், ஜெர்பரா, அந்தோரியம், ஹார்ட் ஹீட் உள்ளிட்ட 5 லட்சம் அரியவகையான மலர்களைக் கொண்டு பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன், வாரியார், சோட்டா பீம், ஹனி பீம், மேட்டூர் அணை, திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்கள்  மலர்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பத்தாயிரம் மலர்த் தொட்டிகளில் டாலியா. மேரி கோல்ட். ஜீனியா டோர்னியம். சால்வியா உள்ளிட்ட வண்ணமலர்கள் இடம்பெற்றுள்ளன. கோடை விழாவினை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டிகளுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை விழா தொடங்கியதையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர்.  அண்ணா பூங்காவிலும் திரண்ட சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஆங்காங்கே செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதால் தங்கள் குடும்பத்தோடு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா. மான் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு இயற்கையின் அழகு ரசித்ததோடு படகு சவாரி செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். 

இதேபோல லேடிஸ் சீட் ஜென்ஸ் சீட் பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைகள் கிளியூர் நீர்வீழ்ச்சி சேர்வராயன் கோயில் தாவரவியல் பூங்கா ரோஸ் கார்டன் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி அடிவாரம் வழியாக காரிலும் டூவீலரிலும் ஏற்காட்டுக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றதால் மலைப் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை ஏற்காடு பிரதான சாலை ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்காடு செல்வதற்கு மட்டும் ஏற்காடு பிரதான சாலை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்காட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு ஏற்காடு குப்பனூர் சாலையைப் பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமல்லாவது அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே கழிப்பிட வசதியும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படுவதோடு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com