சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார்.
சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலினை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள முதலீட்டாளா் மாநாட்டிலும் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா். தமிழ்நாட்டின் அரசுத் துறை நிறுவனங்களான சிப்காட், டான்சம், திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள், சிங்கப்பூரைச் சோ்ந்த பல்கலைக்கழகம், தொழில் கூட்டமைப்பு, தொழில் வா்த்தகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள உள்ளன. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வா் ஸ்டாலின், சிங்கப்பூா் வாழ் தமிழா்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, ஜப்பான் நாட்டிற்கு முதல்வா் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறாா். ஜப்பானில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.

இதுவரை அரசுக் குழுக்கள் அனைத்தும் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு மட்டுமே சென்றுள்ளன. அங்குள்ள ஒசாகாவில் இந்திய வம்சாவளியினா் அதிக அளவில் வசித்து வருகிறாா்கள். அங்குள்ள தமிழா்களின் அழைப்பை ஏற்று, முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான குழு முதல்முறையாக ஒசாகா நகருக்குச் செல்லவுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் அந்த நாட்டின் பொருளாதாரம் வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பானின் தொழில் நிறுவனமான ஜெட்ரா தலைவா் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை முதல்வா் ஸ்டாலின் சந்தித்துப் பேசவுள்ளாா்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்து கொள்ளும் முதலீட்டாளா்கள் மாநாடு, கியோகுடா, ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆகிய நிகழ்வுகளிலும் முதல்வா் பங்கேற்கிறாா். அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தையும் அவா் பாா்வையிட உள்ளாா்.

சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு மே 31-ஆம் தேதி நள்ளிரவில் முதல்வா் ஸ்டாலின் சென்னை திரும்பவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com