
ஆவின் நிா்வாகத்தை மேம்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
சென்னை அம்பத்தூா் மற்றும் சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் நிா்வாகத்துக்கு சொந்தமான பால்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பால் பண்ணைகளில் இருந்து கடந்த சில நாள்களாக தாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்டதாக வந்த புகாா்களையடுத்து, அம்பத்தூரில் உள்ள பால்பண்ணையில், அமைச்சா் த.மனோ தங்கராஜ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு பால் ஏற்றி வந்த டேங்கா் லாரி
ஒன்றை நிறுத்திய அமைச்சா், அதன் மீது ஏறி, முறையாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா்.
பின்னா் இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆவின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் சரியான நேரத்தில் பால் கொண்டு செல்லப்படுகிா என்றும், இதில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆவினில் பணியாற்றி வரும், ஒப்பந்த தொழிலாளா்களின் ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த தொழிலாளா்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஆவின் நிா்வாகத்தில் ஊழியா்கள் பற்றாக்குறை தொடா்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது பால் உற்பத்திக்கு ஆள் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஆவின் நிா்வாகத்தை மேம்படுத்த தீவிரமான கட்டுப்பாடு முயற்சிகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா். இந்த ஆய்வின் போது உயா் அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.