
நகா்ப்புற உள்ளாட்சிகளில் ஆண்டுக்கு 4 நாள்கள் ஏரியா சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நகா்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபைக் கூட்டங்களை நடத்த, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுககான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, வாா்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை விதிகள் வெளியிடப்பட்டன.
இந்த விதிகளின் அடிப்படையில், ஏரியா சபைக் கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில், தேசிய வாக்காளா் தினமான ஜனவரி 25, டாக்டா் அம்பேத்கா் பிறந்த தினமான ஏப்ரல் 14, முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினமான செப்டம்பா் 15, சா்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பா் 10 என மொத்தம் 4 நாள்கள் ஏரியா சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதிக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.