
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்கிழமை காலை தொடங்கிய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. அம்பாள் ஸ்ரீ பிரணாம்பிகையாகவும் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சந்நிதிகொண்டு அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகளுடைய இத்தலத்துக்கு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
நிகழாண்டு கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தேருக்கான பூஜையாக காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம் ஆகியவை நடத்தப்பட்டு தேரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 5.30 மணியளவில் தேர் படம் பிடித்து இழுக்கப்பட்டது. சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேர்கள் வரிசையாக இழுத்துச் செல்லப்பட்டன.
தேர் வடம் பிடிப்பின்போது, முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. புதுவை அமைச்சர் சாய் சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா,மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் உள்ளிட்ட ஏராளமானோர் தேரோட்டத்தில் கலந்துகொண்டு 5 தேர்களை இழுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிக்க: ஆசிய நாடுகளுடன் டேட்டா பரிமாற்றம்: கேபிள்களுடன் சென்னைக்கு வந்த கப்பல்
கோயிலுக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் இழுத்துச் செல்லப்பட்டு மாலையில் நிலையை அடைகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...