புதுச்சேரி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை நீட்டிப்பு

வெயில் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை நீட்டிப்பு
Updated on
2 min read

புதுச்சேரி: வெயில் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடும் வெயில் காரணமாக ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கோடை விடுமுறைக்குக் பின் மீண்டும் பள்ளிகள் நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக விடுமுறை ஒரு வாரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியிலும் பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அரசியல்கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதன்படி பள்ளி விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

மேலும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு விதிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதையேற்று புதுச்சேரியில் உள்ள 127 அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

முதல்கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்பி வைத்துள்ளோம். புதுச்சேரிக்கு ஒரு பகுதி புத்தகம் வந்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் விநியோகிக்கப்படும். ஏற்கனவே இலவச சீருடை, சைக்கிள் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. ஒன்றரை மாதத்திற்குள் லேப்டாப் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 

சட்டசபையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் அரசு நிறைவேற்றி வருகிறது. அரசு, தனியார் பள்ளிகள் சேர்த்து 181 பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு விண்ணப்பித்தோம். இதில் முழுமையாக 127 அரசு பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுமதி கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகள் குறித்து அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்தில் தமிழ் விருப்ப பாடமாகத்தான் இருக்கும். தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்தில் படிக்க வைக்க விரும்புகின்றனர். 

அகில இந்திய தேர்வுகளான நீட், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சியடைய சிபிஎஸ்இ பாடம் அவசியமாகிறது. இதனால் தான் சிபிஎஸ்இ-க்கு அரசு மாறுகிறது என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

சிபிஎஸ்இ பாடங்களை எடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்குகிறோம் என்றும், ஆரம்ப பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்றும்  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அந்த நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதை நிறுத்துவதால் சட்ட சிக்கல் வருமா? என ஆலோசித்து வருகிறோம். மாணவர்களுக்கு மதியம்  முட்டை, மாலையில்  சிறுதானிய உணவு வழங்க அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என  அவர் தெரிவித்தார். 
பேட்டியின்போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com