
தமிழகத்தில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை எப்போதும் கூட்டம்தான். நாட்டின் சில்லறை விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் தமிழக மக்களை டாப் பிராண்டுகள் குறிவைத்துள்ளன.
அதன் முதல்படியாக, மிக முன்னணி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம், இதுவரை என்னென்னவோ மாடல்களை விளம்பரம் செய்து வந்தது. தற்போது, செட்டிநாடு கோழிக்கறி வாசத்துடன் நூடுல்ஸ் விற்பனை தொடங்கியிருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த இந்த நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம், செட்டிநாடு கோழிக்கறி வாசத்தை மோப்பம் பிடித்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தமிழக நுகர்வோர்தான்.
நாட்டிலேயே சில்லறை விற்பனையில் அதிகம் கல்லா கட்டுவது தமிழகத்தில்தான். சில்லறை விற்பனையில் தமிழகத்தின் பங்கு கிட்டத்தட்ட 15 சதவிகிதம். எனவே, தமிழக நுகர்வோரைக் குறிவைத்து விளம்பரத்துறை, விற்பனைத் துறையினர் என அனைவரும் களமிறங்கியுள்ளனர்.
அதனால் ஏற்பட்ட மாற்றம் இப்படி நீள்கிறது.. கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஸ்கெட்டின் பாக்கெட்டில் தமிழ் நடிகர்கள் விஜய், அஜித் இடம்பெற்றுள்ளனர். இந்த பிஸ்கெட்டுக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது அவர்களுக்கும், பிஸ்கெட் கம்பெனிகளுக்குமே வெளிச்சம்.
இது மட்டுமல்ல, ஒரு பிஸ்கெட் தனது விளம்பரத்தில் நாட்டுப் பால் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட் என விளம்பரம் செய்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு மாநிலத்தை மட்டும் குறிவைத்து விளம்பரம் செய்வது, பொருளை தயாரிப்பது என்பதெல்லாம், தயாரிப்புக்கு அதிக செலவை ஏற்படுத்துமாம். அதையெல்லாம் தாண்டி தமிழக நுகர்வோருக்கென இத்தனை தூரம் தயாரிப்பு நிறுவனங்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்றால், தமிழக மக்களே கவனம்.. கவனம்.