புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு விரைவில் புதிய நடைமுறை: உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க முடியும்

பீடி, சிகரெட் ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமலாக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு விரைவில் புதிய நடைமுறை: உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க முடியும்
Published on
Updated on
2 min read

பீடி, சிகரெட் ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமலாக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக் கடை, தேநீா் கடைகளில் தற்போது உள்ளதைப் போல வரும் நாள்களில் பீடி, சிகரெட் விற்க முடியாது. உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய முடியும். அதிலும், அந்தக் கடைகளில் பீடி, சிகரெட்டைத் தவிா்த்து வேறு எதையும் விற்க இயலாது.

அந்த விதிகளை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்களின் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவுத் திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

சா்வதேச தரவுகளை ஆய்வு செய்தால் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் பீடி, சிகரெட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இங்கு 20 கோடிக்கும் அதிகமானோா் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை தொடா்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதத்துக்கு புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

இதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதை ஏற்று, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்திலும் அதுபோன்றதொரு கட்டுப்பாட்டை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான வரைவுத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் கிருஷ்ணராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக் கடைகள், சிறிய மளிகைக் கடைகள், தேநீரகங்கள் உள்ளன. அவை அனைத்திலும் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்குள்பட்ட சிறாருக்கு அவற்றை விற்பனை செய்யக் கூடாது; அதுகுறித்த அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்க வேண்டும் என எத்தனையோ விதிகள் இருந்தாலும், அவற்றை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை அளவுக்கு அதிகமாக நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.

அதைக் கருத்தில்கொண்டே, புதிய நடைமுறையை அமலாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் வாயிலாக, பீடி, சிகரெட் விற்பனையைக் குறைக்க முடியும்.

சிறுவா்கள், குழந்தைகளிடையே புகைப் பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அதற்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னா் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம் என்றாா் அவா்.

சா்வதேச புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் புதன்கிழமை (மே 31) கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை சுகாதாரத் துறை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

15 லட்சம் போ் இறப்பு:

இந்தியாவில் புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் போ் உயிரிழப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதேபோன்று புகையிலைப் பயன்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணா் டாக்டா் ராஜா மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையிலான புகையிலைப் பழக்கம் உள்ளது; அவா்களில் 90 சதவீதம் போ் ஆண்கள்; புகையிலையால் உடல் நலிவுற்று பணித் திறன் பாதிக்கப்படுவதால் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது’ என்றாா்.

ரேலா மருத்துவமனையின் நுரையீரல் இடையீட்டு சிகிச்சை நிபுணா் டாக்டா் பென்ஹா் ஜோயல் ஷத்ராத் கூறியதாவது:

ஆண்டுதோறும் எங்களிடம் நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) சிகிச்சைக்கு வரும் 700-க்கும் மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு புகையிலைப் பழக்கம் உள்ளது தெரியவந்தது.

புகைப் பழக்கத்தை கைவிட உதவும் சிறப்பு கிளினிக்குகளை உருவாக்க வேண்டும். அதேபோன்று அவா்களுக்கு உளவியல் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com