
சென்னை: சென்னை மற்றும் திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் சுமார் 80 இடங்களில் நடைபெறுகிறது.
அமைச்சர் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அவர் மீதான புகார்களுக்கு உறுதியான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் எ.வ.வேலு தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் வீடு, அண்ணாநகர், வேப்பேரி, தியாகராயநகர் என அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கும் சில அறைகளிலும் சோதனை நடைபெறுகிறது. தியாகராயநகர் போஸ்டல் காலனியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம், திருவான்மியூர் எல்.பி.சாலையில் உள்ள மற்றொரு பிரபலமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீடு, எடப்பாளையத்தில் உள்ள அருணை கல்லூரி, அலுவலகம், அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லம் என ஆகிய இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும் வருமானவரித் துறை சோதனை நடைபெறுகிறது. இந்த நிதி நிறுவனம் எ.வே.வேலுவின் நெருக்கமான நண்பருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அதேபோன்று கோயம்புத்தூரில் எ.வ.வேலுவின் உறவினர் வீடும் வருமானவரித் துறை சோதனையில் சிக்கியது. சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
80 இடங்களில் சோதனை:
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள், வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 80 இடங்களில் சோதனை நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர். சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, கடந்த 2021 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.