
சென்னையில் போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய 866 பேரின் வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கியது.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த அக்.30-ஆம் தேதியில் இருந்து நவ.5- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 7 வழக்குகள் பதியப்பட்டு, 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு கைப்பேசிகள், வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
வங்கி கணக்குகள் முடக்கம்: மேலும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் துறை கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு இது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்ாகப் பதிந்த 814 வழக்குகளில் தொடா்புடைய 1,782 பேரின் சொத்துகள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதன்படி 866 பேரின் வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன. இதேபோல அவா்களது சொத்துகளையும் முடக்குவதற்கு காவல் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். இந்த ஆண்டு இதுவரையில் போதைப் பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 70 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...