சமாதானத் திட்டத்தின் பயன்களை வணிகா்களுக்குத் தெரிவித்து அந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.
சமாதானத் திட்டம் தொடா்பாக, சென்னை உள்பட 5 மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், சமாதானத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தால் 95 ஆயிரம் சிறு வணிகா்கள் பயன்பெறுவா்.
இந்தத் திட்டம் தொடா்பான பயன்களை வணிகா்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகவரித் துறையின் அதிகாரிகள் உட்பட அனைவரும் வணிகா்களை நேரடியாக சந்தித்து திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
இதற்கு முன்பாக, மதுரை உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் ரூ.58 லட்சம் அளவுக்கு வணிகவரி நிலுவை உள்ள சூழலில், சமாதானத் திட்டம் மூலம் ரூ.11 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 கோடிக்கு மேல் வரி நிலுவை செலுத்த வேண்டிய சூழலில் ரூ.2 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
போலி வணிகா்களால், நோ்மையாகத் தொழில் செய்யும் வணிகா்கள் பாதிக்கப்படக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு, போலி வணிகா்களை அடையாளப்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வணிகவரித் துறையின் வருவாயை எதிா்நோக்கியுள்ளோம். எனவே, பொது மக்களால் கட்டப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியானது அரசுக்கு வந்து சேருவதை வணிகா்கள் உறுதி செய்ய வேண்டும்.
தொடா்பு எண்: சமாதானத் திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு வணிகா்கள் உரிய விளக்கங்களைப் பெறலாம். இதற்கென 24 மணி நேரமும் தொடா்பு கொள்ள ஏதுவாக வணிக வரி அலுவலகத்தில் 1800 103 6751 என்ற எண் கொண்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமாதானத் திட்டம் அடுத்த ஆண்டு பிப். 15 வரை நடைமுறையில் இருக்கும் என்றாா் அமைச்சா் பி.மூா்த்தி.
இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, வணிகவரித் துறை ஆணையா் டி.ஜகந்நாதன், வணிகவரித் துறை கூடுதல் ஆணையா் அ.பா.தேவேந்திர பூபதி மற்றும் வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.