டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.16) காலை வரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமாா் 470 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, பின்னா் வடக்கு வடகிழக்கு திசையில் நகா்ந்து 18-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிஸா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடா்ந்து நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 36 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை காலை வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வியாழக்கிழமை (நவ.16), குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரைப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

வெள்ளிக்கிழமை (நவ.17) வரை மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com