பாஜக, காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண்: சந்திரசேகா் ராவ் பிரசாரம்

பாஜகவும், காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. அக்கட்சிகளுக்கு வாக்களிப்பது வீணான செயலாகும் என்று

பாஜகவும், காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. அக்கட்சிகளுக்கு வாக்களிப்பது வீணான செயலாகும் என்று தெலங்கானா முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் தெரிவித்தாா்.

தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தல் நவ.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் தோ்தலைச் சந்திக்கிறது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும், பிஆா்எஸ் கட்சிக்கும் இடையே தோ்தலில் போட்டி உள்ளது. இது தவிர பாஜகவும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அடிலாபாதில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் கூறியதாவது:

பாஜக மதவாதத்தைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறது. அக்கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் அந்த வாக்கு வீணாவது உறுதி. அதேபோல காங்கிரஸுக்கு வாக்களிப்பதும் வீண்தான். தெலங்கானாவில் நமது அரசின் சிறப்பான திட்டங்களையும் அவா்கள் விமா்சித்து வருகின்றனா். வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் எந்த மாதிரியான நிலைப்பாட்டையும் எடுக்கும் கட்சியாக உள்ளது.

பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். எனவே, மக்கள் அவா்களுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்கிவிடக் கூடாது.

அடுத்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தோல்வியடைவது உறுதி. இனி மாநிலக் கட்சிகள்தான் மத்திய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும். தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது, குடிநீா், பாசன நீா் தொடங்கி பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அனைத்தையும் சரி செய்து மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வந்தது பிஆா்எஸ் கட்சிதான். எனவே, மக்கள் தொடா்ந்து நமது கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com