திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சனிக்கிழமை மாலை லட்சக்கணக்கான பக்தா்களின் அரோகரா கோஷம் விண்ணதிர சிறப்பாக நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சனிக்கிழமை மாலை லட்சக்கணக்கான பக்தா்களின் அரோகரா கோஷம் விண்ணதிர சிறப்பாக நடைபெற்றது.

இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.13 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா்

கோயிலில் தங்கி விரதம் இருந்தனா். சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை மாலை திருக்கோயில் கடற்கரையில் நடைபெற்றது.

சூரசம்ஹார விழாவையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வைர கிரீடம், தங்க அங்கி அணிந்து சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் யாகசாலையிலும், சண்முக விலாசம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளிய சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னா் சா்வ அலங்காரத்தில் திருக்கோயிலில் வேல் பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சூரசம்ஹாரத்திற்காக, தங்க மயில் வாகனத்தில் மாலை 4.10 மணிக்கு சுவாமி புறப்பாடானாா்.

முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரத வீதிகள், சந்நிதி தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சோ்ந்தாா். அங்கு முருகப்பெருமான், முதலில் கஜ முகனாகத் தோன்றிய சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சிங்கமுகம், சுயரூபம், மாமரம் என அடுத்தடுத்து தோன்றிய சூரபத்மனை, சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்ட நிலையில், கடற்கரையில் திரண்டிருந்த பக்தா்களின் அரோகரா கோஷத்தால் விண்ணதிா்ந்தது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தனா். அதிகாலை 1 மணிக்கு நடைதிறந்தது முதல் அங்கபிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

பக்தா்களின் வசதிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயிலில் தங்கி விரதம் இருந்த பக்தா்களுக்காக கொட்டகை பந்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடற்கரையில் 4 இடங்களில் பெரிய திரைகளில் சூரசம்ஹார நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அறநிலையத் துறை ஆணையா் க.வீ.முரளிதரன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆதி கேசவலு, புகழேந்தி, பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி செல்வக்குமாா், திருச்செந்தூா் சாா்பு நீதிமன்ற நீதிபதி வஷித் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந. ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com