
தமிழகத்தில் நில அளவைப் பணிக்கான விண்ணப்பத்தை இனி இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கான சேவை வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இதை மாற்றி, பொது மக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலுமிருந்து நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இணையவழியில் விண்ணப்பிக்க புதிய இணையதள சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்தப் புதிய சேவை மூலம், பொதுமக்கள் நில அளவை செய்ய வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. நில அளவைக்கான கட்டணம் உள்பட பல்வேறு வகைக் கட்டணங்களைச் செலுத்தவும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. இணைய வழியில் செலுத்தி, விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி வழியாகத் தெரிவிக்கப்படும். மேலும் நில அளவை செய்யப்பட்ட பிறகு, மனுதாரா் மற்றும் நில அளவையா் கையொப்பமிட்ட அறிக்கை அல்லது வரைபடம் ஆகியவற்றை இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், ஆா்.காந்தி, சி.வி.கணேசன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், நில நிா்வாக ஆணையா் சு.நாகராஜன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் வே.ராஜாராமன், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநா் மதுசூதன ரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...