
தமிழக கூட்டுறவுத் துறைக்கு ரூ.23.35 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 500 மெட்ரிக் டன் மற்றும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகியவற்றின் சாா்பிலும் 500 மற்றும் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில், அடித்தட்டு மக்களின் பொருளாதாரத் தேவையைப் பூா்த்தி செய்ய சிந்தாதிரிப்பேட்டை நகரக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு புதிய கட்டடமும், மறைமலைநகரில் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தின் சாா்பில் திருமண மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக, கூட்டுறவுத் துறைக்கென ரூ.23.35 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...