
மணல் குவாரி முறைகேடு புகாா் தொடா்பாக தமிழக நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையாவிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.
தமிழகத்தில் நீா்வளத் துறையின் கீழ் சுமாா் 15 ஆற்று மணல் குவாரிகள் உள்ளன. இதில் 12 மணல் குவாரிகள் மட்டும் முழுமையாகச் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில்
இருந்து மணலைப் பெறுவதற்கு நீா்வளத் துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் பதிவு செய்து, பணத்தை செலுத்தி ரசீது பெற்று, அந்த ரசீது மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் மணலை லாரிகளில் பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆற்றிலிருந்து மணலை எடுத்து வந்து யாா்டில் மணலை இருப்பு வைத்து, லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு மூலம் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்தப் பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் வசிக்கும் தொழிலதிபா் ரத்தினம் ஆகியோா் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மணல்குவாரிகளில் முறைகேடு: இந்த நிலையில், ஆன்லைன் மூலம் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் குவாரிகளிலிருந்து மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின. இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பும், ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பும் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த புகாா்களின் அடிப்படையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த முறைகேட்டில் தொடா்புடைய புதுக்கோட்டை தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் ரத்தினம் ஆகியோா் தொடா்புடைய இடங்கள், நீா்வளத் துறை உயரதிகாரிகள் சொந்தமான இடங்கள் என சென்னை, திருச்சி, வேலூா், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய ஊா்களில் 30 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் கடந்த செப். 12-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.
இச் சோதனையில் ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் மற்றும் முறைகேடு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனை நிறைவடைந்த பின்னரும், அமலாக்கத் துறையினா் மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ட்ரோன்கள் மூலமாகவும், ஐஐடி நிபுணா் குழு மூலமாகவும் பல கட்டங்களாக ஆய்வு செய்தது. சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணலின் அளவை கணக்கிட இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணை: இந்த முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக நீா்வளத் துறை முதன்மை பொறியாளா் முத்தையாவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. இந்த அழைப்பாணையை ஏற்று முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக திங்கள்கிழமை ஆஜரானாா்.
அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல கட்டங்களாக விசாரணை செய்தனா். காலை தொடங்கிய விசாரணை இரவை தாண்டியும் நீடித்தது. இந்த விசாரணைக்கு நீா்வளத்துறையில் பணியாற்றும் மதுரையைச் சோ்நத பொறியாளா் இளங்கோவனும் ஆஜரானாா். அவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
இதன் அடுத்த கட்டமாக, மணல்குவாரிகள் செயல்படும் மாவட்டங்களில் பணிபுரியும் ஆட்சியா்கள்,நீா்வளத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளனா். இந்த விசாரணைக்குப்பிறகு அமலாக்கத் துறை நடவடிக்கைத் தீவிரமாகும் என்று தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...