
சென்னை: அடையாறு கேட் ஹோட்டல் என்று புகழ்பெற்ற நட்சத்திர விடுதி, 2015ஆம் ஆண்டு கிரௌன் பிளாசா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அது டிசம்பர் 20ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்டர்கான்டினென்ட்டல் ஹோட்டல்ஸ் குரூப் (ஐஎச்ஜி) என்ற நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அடையாறு கேட் ஹோட்டல் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. இது 2015ஆம் ஆண்டு பெயர்மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களுக்கு அது எப்போதும் அடையாறு கேட் ஹோட்டல்தான்.
விரைவில், இந்த ஹோட்டலை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாங்கி, மிகப்பெரிய சொகுசு குடியிருப்பாக மாற்றவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நட்சத்திர விடுதி ஊழியர்களும் உறுதி செய்துள்ளனர். அதாவது, தங்களது விருந்தினர்களிடம், வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியுடன் தங்களது சேவை நிறுத்தப்படுவதாகவும் அதன்பிறகு ஹோட்டல் ரூம்கள் முன்பதிவு செய்யப்படாது என்று தெரிவித்துவருவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தகவலை அறிந்த விருந்தினர்கள், தங்களது எக்ஸ் பக்கத்தில், மிகச் சிறந்த தருணங்களை இந்த நட்சத்திர விடுதியில் பெற்றிருக்கிறோம் என்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல், செய்தியாளர் சந்திப்பு, அரசு நிகழ்ச்சிகள், சந்திப்புகள், இதர கொண்டாட்டங்களுக்கும் ஏற்ற இடமாக இருந்த நட்சத்திர விடுதி விளங்கியிருக்கிறது.
இந்த நட்சத்திர விடுதி எந்தத் தொகைக்கு கைமாறுகிறது என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஒட்டுமொத்தமாக இடத்தை விடுதி நிர்வாகம் விற்றுவிடுகிறதா? இல்லை ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறதா? என்பதெல்லாம் பதில் இல்லா கேள்விகளாகவே உள்ளன. ஆனால், விரைவில் இது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பாக மாறவிருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கக் காலத்திற்குப் பிறகு இந்த விடுதி சில பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் விடுதி நிர்வாகம், பொருளாதார பிரச்னையால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஹாலிடே இன் அடையாறு கேட் ஹோட்டல், 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் 250 அறைகள் உள்ளன. பிறகு 1985ஆம் ஆண்டு அதன் நிர்வாகம் மாறியபோது ஹாலிடே இன் மெட்ராஸ் என பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.