மழையில் நனைந்த நவம்பர்.. எப்படி இருக்கும் டிசம்பர்?

காற்றழுத்த தாழ்வு  காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழையில் நனைந்த நவம்பர்.. எப்படி இருக்கும் டிசம்பர்?


சென்னை: டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், அந்தமானில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு  காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு, டிசம்பர் முதல் வாரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தைக் கடந்ததும் இரண்டு நாள்களுக்கு மழை குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1 முதல் சென்னை 466.2 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது. 

தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை வெடிக்க முடியுமா என்ற கலக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மழை கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது.

ஆனால், வருண பகவானுக்கும் கருணை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சிறு, சாலையோர வியாபாரிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தீபாவளிக்கு முன்பு இரு நாள்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றது மழை.

இல்லையேல் பட்டாசுகளை எல்லாம் மழை நீரில் படகு விட்டிருக்கும் நிலை கூட பல இடங்களில் ஏற்பட்டிருக்கும். எப்போதாவது மழை கொட்டிவிட்டுச் செல்லும் சில ஆண்டுகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது முதல் மழைக் காலமாகவே மாறிவிட்டிருந்தது.

இத்தனைக்கும் பெரிய அளவில் காற்றழுத்தத் தாழ்வுகள் உருவாகாமலேயே இத்தனை நாள்கள் நவம்பரில் மழை பெய்திருக்கிறது.

அப்படியிருக்கும் போது, டிசம்பர் மாதம் எப்படியிருக்கப் போகிறது என்று இப்போதே கலங்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில்தான், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com