வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பார்சல் லாரி மோதிய வேகத்தில் அப்பளம் போல் நசுங்கிய வேன்
பார்சல் லாரி மோதிய வேகத்தில் அப்பளம் போல் நசுங்கிய வேன்


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னையில் இருந்து  சேலம் நோக்கி சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஒரு பிக்கப் வேன் வந்து கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பார்சல் லாரி எதிர்பாரத விதமாக வேன் மீது நேருக்கு நேர் மோதியது. லாரி மோதிய வேகத்தில் அந்த வேன் அப்பளம் போல் நசுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவரோடு பயணித்த அரக்கோணம் சுதர்சன், குடியாத்தம் பிரகாசம் உள்ளிட்ட மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

முன்பகுதி முழுவதும் சேதமடைந்த பார்சல் லாரி

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஒன்றிணைந்து, கிரேன் இயந்திரத்தை பயன்படுத்தி, மூவர் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பார்சல் லாரி ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுதும் போலீசார்

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி ஹரிசங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். 

வியாழக்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com