இன்று 1,000 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இன்று 1,000 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 2,972 அரசு, தனியாா் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் கண்டறியப்படுபவா்களின் கிராமம், நகரங்கள் வாரியாக பட்டியல் தயாா் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த் தடுப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 23,717 தினசரி தற்காலிக பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மருந்துகளை இருப்பு வைக்க... தென்மேற்கு பருவமழைக் காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிா்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகள், ரத்த கூறுகள், ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறையோடு இணைந்து உள்ளாட்சி அமைப்புகள், டயா், நெகிழி கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருள்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்புக் குடிநீா், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், டெங்குவுக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதலாக அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 363 போ் சிகிச்சை பெறுகின்றனா். சென்னையில் மட்டும் 54 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னையில் காலை 9 மணிக்கு மயிலாப்பூா் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெறும் முகாமை நானும் துறைச் செயலரும் தொடங்கி வைக்கவுள்ளோம். இதுபோன்ற மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com