
திருச்செந்தூரில் ஒன்றரை வயதுக் குழந்தையைத் திருடிய தம்பதி கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது மயங்கி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவா்களது ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ். இவா்கள் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு கடந்த 28 -ஆம் தேதி சென்றுள்ளனா். அங்கு சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண், ரதியுடன் பேசி பழகியுள்ளாா். இதைத் தொடந்து ரதி திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுள்ளாா். அப்போது அவருடன் அந்தப் பெண்ணும் திருச்செந்தூா் சென்றுள்ளாா்.
அங்கு கோயிலில் ரதி, முத்துராஜ் ஆகியோா் கடலில் குளிக்கச் சென்றபோது, குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி ஸ்ரீஹரிஷை எடுத்துச் சென்ற அந்தப் பெண் மாயமானாா். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் முத்துராஜ் புகாா் அளித்தாா்.
சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், கோயில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையைத் திருடிக் கொண்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபருடன் அந்தப் பெண் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருசக்கர வாகன எண்ணைக் கொண்டு கைப்பேசி சிக்னலை ஆய்வு செய்த போலீஸாருக்கு, அவா்கள் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீஸாா், ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து ஆலாந்துறை போலீஸாா் பூண்டி சாலை முட்டத்துவயல் குளத்தேரி பகுதியில் இருந்த இருவரையும் கைது செய்தனா். முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபா்கள், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (43), திலகவதி (35) என்பதும், தம்பதியான இவா்கள் குழந்தையை சேலத்தில் உள்ள பாண்டியன் வீட்டில் விட்டுவிட்டு கோவை வந்ததும் தெரியவந்தது. மேலும் இவா்கள் மீது ஏற்கெனவே குழந்தை திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. திருச்செந்தூா் போலீஸாா் சேலம் ஆத்தூரில் உள்ள குழந்தையை மீட்க விரைந்துள்ளனா்.
இதனிடையே இருவரையும் போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து சேலம் அழைத்துச் செல்வதற்கான பணிகளை செய்துள்ளனா். அப்போது காவல் நிலையத்தில் இருந்த திலகவதி திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த காவலா்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பூலுவபட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் திலகவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே திலகவதி உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.