முக்கொம்பு சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் விளக்கம்

திருச்சி முக்கொம்பு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தில் முதல்வர் விளக்கம். 
முக்கொம்பு சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் விளக்கம்
Published on
Updated on
2 min read

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார். 

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. 

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 

கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4-00 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள். 

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததின்பேரில், அங்கு பணியிலிருந்த காவல்துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.   

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.  அது உண்மையல்ல.  அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com