தேனியில் 2 விவசாயிகள் இறப்பு:  பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்குத் தடை

தேனியில் நெல் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த 2 விவசாயிகள் பலியானதை அடுத்து பூச்சி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தேனியில் 2 விவசாயிகள் இறப்பு:  பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்குத் தடை


தேனி: தேனியில் நெல் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த 2 விவசாயிகள் பலியானதை அடுத்து பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, கூடலூா் ஊராட்சி 19-ஆவது வாா்டு காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி பாண்டியன் (62). கூடலூா் மூனுசாமி கோயில் தெருவைச் சோ்ந்த வீரணன் மகன் குணசேகரன் (42). இவர்கள் கடந்த செப். 26-ஆம் தேதி கூடலூரில் உள்ள ஒரு உரக் கடையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி தங்களுக்கு சொந்தமான நெல் வயலுக்குத் தெளித்தனர். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவர்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து அவா்கள் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி விவசாயி பாண்டியன் கடந்த அக்.1-ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்த சில நாள்கள் இடைவெளியில் மற்றொரு விவசாயி குணசேகரனும் அக்.8 -ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சில நாள்கள் இடைவெளியில் விவசாயிகள் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் உள்ளுறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் சிஆர்பிசியின் 174-ஆவது பிரிவின் கீழ் (இயற்கைக்கு மாறான மரணங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஏற்படும் மரணங்கள்) என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம்:
நெல் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும்போது 2 விவசாயிகளின் இறப்பைத் தொடர்ந்து. பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து ‘சீல்’ வைக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இதுதொடா்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.சதீஷ்பாபு பேசுகையில், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனங்களின் தரம் குறித்து வேளாண் துறை அவ்வப்போது சோதனை செய்வதில்லை. பூச்சிக்கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக செறிவு கொண்டதாக தெரிகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் உள்ள பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் “மாவட்டத்தில் உள்ள உரக் கடைகளில் காலாவதியான விதைகள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் துயரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ரூ.25 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும்,'' என்று சதீஷ்பாபு வலியுறுத்தினார். 

இதுதொடா்பாக வேளாண்மை அலுவலா் விஷ்ணு கூறுகையில், உரக் கடைகளில் மாதந்தோறும் முறையாக ஆய்வு நடத்தி வருகிறோம். இரண்டு விவசாயிகளின் உயிரிழப்பு தொடா்பாக, உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மேலும், கூடலூரில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து, மருந்துகளை மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார். 

வேளாண் இணை இயக்குநர் ஷங்கர் கூறுகையில், “விவசாயிகள் நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி இருக்கலாம். மேலும், விவசாயிகள் இருவரும் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்துள்ளனர். சப்பருடன் ஒரே ஒரு பூச்சிக்கொல்லி மட்டுமே கலக்கப்படும், ஆனால் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை சப்பருடன் கலந்ததாகத் தெரிகிறது,” என்று ஷங்கர் தெரிவித்தார்.

மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலைய நுழைவு பகுதியில் பாரதீய கிசான் சங்கத் தலைவா் எம்.சதீஷ்பாபு தலைமையில் , முல்லைச்சாரல் விவசாய சங்கத் தலைவா் கொடியரசன் முன்னிலையில் பொதுமக்கள் உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

தற்காலிகமாக தடை
இந்த நிலையில், கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள், நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து இறந்ததாகக் கூறப்படும் சில நாட்களுக்குப் பிறகு, மாநில வேளாண்மைத் துறை, தேனி மாவட்டம் முழுவதும், பழுப்பு இலைப்புழுவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக வேளாண்மை இணை இயக்குநர் ஷங்கர் கூறுகையில், பூச்சிக்கொல்லியின் பெயர் ‘சப்பர்’ என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். “ரசாயன மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்குமாறு, ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்,'' என ஷங்கர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை, பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஊழியர்கள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 40 விவசாயிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினர். பெரியகுளம் பகுதியில் 37 விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது என்றார். இரு விவசாயிகள் இறப்பு குறித்து ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com